புதன், 30 மார்ச், 2011

சிதறு தேங்காயுடன் சேர்ந்து சிதறிய திமுகவின் பகுத்தறிவு?

பெரியாரின் பகுத்தறிவுப் பாசறையில் படித்தவர், காஞ்சிப் பாசறையில் வளர்ந்தவர் என்று தனக்குத்தானே தம்பட்டம் அடித்துக் கொள்ளும் கருணாநிதி, தமது அரசின் மருத்துவக் காப்பீடு குறித்த விளம்பரத்தில் எமதர்மர் உயிரைப் பறிப்பதைப் போலவும், அதை இவர் தடுப்பது போலவும் சித்தரித்து தன்னுடைய பகுத்தறிவு முகமூடியை தானே கிழித்துக் கொண்டு தன்னுடைய சுயரூபத்தை வெளிப்படுத்தியதும் மக்களுக்கு நினைவிருக்கலாம்.

குங்குமப் பொட்டு வைத்துக் கொள்ளும் திமுகவினரையும், தீ மிதிக்கும் கட்சிக்காரர்கள் மற்றும் அமைச்சர்களையும் அவ்வப்போது கண்டிப்பதோடு மட்டுமல்லாமல், இந்து மதத்தினர் கடவுளென நம்புபவர்களை கொச்சைப் படுத்தியும், நிந்தித்தும் தன்னை ஒரு நாத்திகர் போல் காட்டிக் கொண்டிருந்தார் கருணாநிதி. ஆனால் மஞ்சள் துண்டுக்கு மாறினார். அதற்கு வியாக்கியானமும் கொடுத்து மறைத்தார். மேலும், சாய்பாபாவுடனும்,அமிர்தானந்தமயியுடனும் மேடையில் காட்சிதந்து அருள்பாலித்தார்[?].அத்துடன் 'கடவுளை நான் ஏற்றுக்கொள்கிறேனா என்பதைவிட கடவுள் என்னை ஏற்றுக்கொள்ளக்கூடிய பணியை செய்கிறேனா என்பதுதான் முக்கியம்' என்று திருவாய் மலர்ந்தார். 

மேலும் தஞ்சை பெரிய கோயிலுக்கு புறவாசல் வழியாக சென்று விழாவில் கலந்து கொண்டதும் பத்திரிக்கைகளில்  பரபரப்பாக பேசப்பட்டது.  இந்நிலையில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து, மூன்று நாள் சுற்றுப் பயணமாக சென்னையிலிருந்து திருவாரூர் புறப்பட்டார் கருணாநிதி. பிரசார வேன் மூலம் திருவாரூர் புறப்பட கருணாநிதி வேனில் ஏறி அமர்ந்ததும், கோபாலபுரத்தில் அவர் வீட்டு முன் உள்ள வேணுகோபால்சாமி கோவிலுக்கு முன், சூறை தேங்காய்கள் உடைக்கப்பட்டன. இதற்காக, பிரசார வேன் சில நிமிடங்கள் நின்று, சூறை தேங்காய் உடைக்கப்பட்ட பின் புறப்பட்டு சென்றது.

'சில வேண்டுதல்கள் அடிப்படையில் தேங்காய் உடைப்பது இந்துமதத்தவரின் நம்பிக்கை. ஆனால் தன்னை  நாத்திகன் என்று சொல்வதிலேயே ஆனந்தம் என்று கூறும் கருணாநிதி, தான் செல்வதற்கு முன்னால் தேங்காய் உடைத்ததை அனுமதித்தது எந்த நம்பிக்கையில் என்பதுதான் புரியாத புதிராகும்.

அடுத்து பிரச்சாரத்திற்கு செல்லும் தலைவரே தேங்காய் உடைத்து பக்திமயமாக  செல்கையில், அவரது கட்சி வேட்பாளர் என்ன நினைத்தாரோ ஒரு சாமியாரின் காலில்  சாஸ்டாங்கமாக விழுந்து ஆசி பெற்றுள்ளார்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின், 50வது பட்டம் ஜீயராக ஸ்ரீரங்க நாராயண ஜீயர் சுவாமி உள்ளார். ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் ஜெயலலிதாவுக்கு எதிராக தி.மு.க., சார்பில் களமிறக்கப்பட்டுள்ள வேட்பாளர் ஆனந்த், தனது பரிவாரங்களுடன் ஜீயரை சந்தித்தபோது, திமுக வேட்பாளர் ஆனந்த், ஜீயர் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார். இந்த தேர்தலில் போட்டியிடும் தன்னை வெற்றி பெற ஆசி வழங்கும்படி கேட்டுக் கொண்டார். "நிச்சயம் நீ வெற்றி பெறுவாய்' என, ஜீயர் ஆசி வழங்கினார். 

எல்லாம் பகுத்தறிவின் பரிணாம வளர்ச்சியோ? கி. வீரமணியார் கேட்டுச்சொன்னால்  நல்லாருக்கும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக