வெள்ளி, 25 மார்ச், 2011

பொருத்து பார்த்து பொங்கி எழுந்த பஹ்ரைன்; அடங்கிய கிளர்ச்சியாளர்கள்!

ஹ்ரைன் ஆட்சியாளருக்கு எதிராக ஷியா பிரிவு முஸ்லிம்கள் ஒரு மாத காலமாக கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். கிளர்ச்சியாளர்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்திட இளவரசர் சல்மானை நியமித்தார் மன்னர் ஹமத். ஆனால் பேச்சுவார்த்தையை புறந்தள்ளி சாலைகளை முடக்குவது, முக்கிய அலுவலகங்களை முற்றுகையிடுவது, மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்துவது என இவ்வாறான செயல்களில் கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.
 
இந்நிலையில் சவூதி அரேபியா, பஹ்ரைன், ஓமன், கத்தார், குவைத், எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் அடங்கிய வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில்[GCC ] மூலம் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர நாடினார் மன்னர் ஹமத். உடனடியாக சவூதியில்  இருந்து 1000 ராணுவ வீரர்களும், துபையிலிருந்து 500 ராணுவத்தினரும் கடந்த 14 -03 -11 அன்று பஹ்ரைன் வந்தடைந்தனர். அதை தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு 'எமெர்ஜென்சி' எனப்படும் அவசரநிலைப் பிரகடனத்தை அறிவித்தார் மன்னர்.
 
இதற்கு பின்னும் கிளம்பிய கிளர்ச்சியாளர்களை ராணுவம் கட்டுக்குள் கொண்டுவந்து கிளர்ச்சியை முழுமையாக அடக்கியுள்ளது. இரவு நேரங்களில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கிளர்சியை தூண்டுவதாக எதிர்க்கட்சி தலைவர்கள் ஹசன் முஷைமா, அப்துல் வகாப், இப்ராகிம் ஷெரீப் உள்ளிட்ட ஆறு தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஹசன் முஷைமா ஏற்கனவே அரசியல் கைதியாக இருந்து சமீபத்தில் மன்னரால் விடுதலை செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதற்கிடையில் பஹ்ரைனுக்கு சவூதி மற்றும் எமிரேட்ஸ் படைகள் சென்றதை இரான்  கண்டித்துள்ளது. மேலும் இராக் மற்றும் குவைத் ஷியாக்களும் கண்டனப் போராட்டங்களை நடத்தியுள்ளனர். சவூதி மற்றும் எமிரேட்ஸ் படைகள் பஹ்ரைனுக்கு சென்றதற்கு காரணம், வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின்  உறுப்பு நாடாக  உள்ள பஹ்ரைனில் அமைதியை ஏற்படுத்தவே அன்றி, ஆட்சியாளர்கள் சன்னிப் பிரிவினர் என்பதற்காக அல்ல. எனவே சவூதி  மற்றும் எமிரேட்ஸின் அமைதிக்கான ஒத்துழைப்பை ஷியா-சன்னி கண்ணோட்டத்தில் பார்ப்பது தவறு என்கின்றனர் அரபுலக ஆய்வாளர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக