வியாழன், 12 ஜூலை, 2012

400 கோடி ஊழல்; நாற்றமெடுக்கும் நரமோடியின் நல்லாட்சி[!]


ந்தியாவில் வளர்ச்சியில் நம்பர் 1 மாநிலமாக திகழ்வது குஜராத் தான் என்று சங்பரிவார சக்திகள் மார்தட்டிக் கொள்கின்றன. குஜராத் நம்பர் 1 என்பது உண்மைதான்; ஆனால் எதில் நம்பர் 1 என்றால், மதக்கலவரத்தை தூண்டி மக்களை கொல்வதிலும், சொந்த மாநில மக்களையே அகதிகளாக ஆக்குவதிலும், போலி என்கவுண்டர்களிலும், பல்வேறு ஊழல்களிலும் நம்பர் 1 ஆக திகழ்கிறது. 

அந்தவரிசையில், குஜராத் மாநில மீன்வளத் துறை அமைச்சர் புருஷோத்தம் சோலங்கி. மீன் பிடிப்பதற்கான ஒப்பந்தம் வழங்கியதில், இவர், 400 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக, குற்றம் சாட்டப்பட்டது. இவர் மீது வழக்குத் தொடர அனுமதி வழங்க முடியாது என, கடந்த மாதம் 29ம் தேதி, குஜராத் மாநில அரசு முடிவெடுத்தது. கவர்னரின் ஒப்புதல் இல்லாமல், இதைச் செய்தது.

இதை எதிர்த்தும், வழக்குத் தொடர அனுமதி மறுத்த முதல்வர் மோடி மற்றும் அமைச்சர்கள் சிலர் மீது, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிடக் கோரியும், குஜராத் மாநில ஐகோர்ட்டில், வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜெயந்த் படேல் மற்றும் சோனி ஆகியோர் அடங்கிய ஐகோர்ட் பெஞ்ச், மோடி மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி தாக்கல் செய்த மனுவை, தள்ளுபடி செய்தது. அதே நேரத்தில், அமைச்சர் புருஷோத்தம் சோலங்கிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி அளிப்பதில், மாநில கவர்னர் கமலா பெனிவால், இறுதி முடிவு எடுக்கலாம் என்று உத்தரவிட்டுள்ளது.

ஒரு மாநில அமைச்சர் மீது ஊழல் வழக்கு தொடுக்க கவர்னரின் அனுமதி தேவை என்று சட்டம் சொல்லும் நிலையில் குஜராத் அரசு, கவர்னரின் அதிகாரத்தை கையிலெடுத்து அமைச்சரை காப்பாற்ற முயற்சித்து நீதிமன்றத்தில் குட்டுப்பட்டுள்ளது. நீதிமன்றங்களில் குட்டுப்படுவது மோடிக்கு ஒன்றும் புதிதல்லவே. ஏற்கனவே உள்ளூர் நீதிமன்றம் தொடங்கி, உச்சநீதிமன்றம் வரை பல்வேறு விசயங்களில் அவர் வாங்கிக்கட்டிய அனுபவம் உள்ளவர்தானே! குஜராத் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பையடுத்து ஊழல் அமைச்சர் மீது வழக்கு தொடர கவர்னர் அனுமதித்து இந்த சங்பரிவார ஊழல் முகத்தை உலகுக்கு காட்ட முன்வரவேண்டும். குஜராத் உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பிரதமர் கனவில் மிதக்கும் மோடிக்கு ஒரு பின்னடைவு என்றே அரசியல் ஆர்வலர்கள் கூறுகிறார்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக