வியாழன், 12 ஜூலை, 2012

மூடநம்பிக்கைகள் பலவிதம்;அதில் இது ஒருவிதம்.




னிதனை ஆளும் கடவுளை அவரவர் கற்பனைக்கு ஏற்றபடி கற்பித்தவர்கள், அந்த கடவுளை வழிபடும் விசயத்திலும் தாங்களாகவே சில சடங்குகளையும், நம்பிக்கைகளையும் செயல்படுத்தி வருகிறார்கள். அது அவர்களின் நம்பிக்கை சார்ந்த விஷயம் என்றால் அதை நாம் கண்டுகொள்ள மாட்டோம். ஆனால் தங்களின் நம்பிக்கையை நாட்டில் நடக்கும் பிரச்சினைகளோடு ஒப்பிட்டு, ''இதனால் தான் அது நடந்தது' என்று சொல்வதால் அது உண்மையா என்பதை தெளிவுபடுத்த வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்படுகின்றோம்.


திருப்பூர் மாவட்டம், காங்கேயம் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில், இந்தக் கோவில் சன்னிதானம் அருகே, "ஆண்டவன் உத்தரவு பெட்டி' என்ற, பெட்டி உள்ளது. அது என்ன ஆண்டவன் உத்தரவுப் பெட்டி என்றால், 
பக்தர்கள் கனவில், சிவன்மலை ஆண்டவர் தோன்றி, குறிப்பிட்ட ஒரு பொருளை அந்த பெட்டியில் வைக்குமாறு கூறுவாரம். அந்தப் பொருளை கோவில் நிர்வாகத்திடம் பக்தர் ஒப்படைப்பார். பக்தர் கூறுவது உண்மைதானா என்பதை அறிய, கருவறையில் அந்தப் பொருளை வைத்து, சுவாமியிடம், பூ போட்டு உத்தரவு கேட்கப்படும். உத்தரவு சரியென வந்தால், பக்தர் கொண்டு வந்த பொருள், "ஆண்டவன் உத்தரவு' பெட்டியில் வைக்கப்படும். அடுத்த உத்தரவு வரும் வரை, அந்தப் பொருளுக்கு தினமும் பூஜைகள் நடக்கும். இப்பெட்டியில் வைக்கப்படும் பொருள் அல்லது அது சம்பந்தப்பட்ட தொழிலில் முதலில் சரிவும், பின்னர் ஏற்றமும் ஏற்படும் என்பது நம்பிக்கை. பல நூறு ஆண்டுகளாக இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது என்கிறது ஒரு ஊடகம்.

இத்தோடு நின்றிருந்தால் இது அவர்களின் நம்பிக்கை என விட்டுவிடலாம். ஆனால், இதையொட்டி அவர்கள் அடித்து விடும் கதைகளை பாரீர்;

கார்கில் போர் என்பது வாஜ்பேயி அரசின் கையாலகாத நிர்வாகத்தில் பாதுகாப்பு குறைவின் காரணமாக நமது நாட்டின் எல்லைக்குள் ஊடுருவிய அந்நிய தீவிரவாதிகளால் நடந்த ஒன்றாகும். இந்தப் போர் நமது நாட்டின் எல்லைக்குள் நடந்த ஒரு போராகும். இதில் கடும் முயற்சிகளுக்குப் பின் பல இந்திய வீரர்களை இழந்து, கார்கில் பகுதியிலிருந்து அந்நிய தீவிரவாதிகள் விரட்டப்பட்டார்கள் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றாகும். இதற்கு இந்த ஆன்மீகவாதிகள்[!] கூறும் கதை என்ன தெரியுமா? 

சிவன்மலை ஆண்டவர் ஒரு பக்தர் கனவில் தோன்றி, 'ஆண்டவன் உத்தரவு பெட்டி'யில் ஒரு துப்பாக்கி குண்டை வைக்கச் சொன்னாராம். அவ்வாறே வைக்கப்பட்டபோது கார்கில் போர் வந்ததாம். இப்படி கதை சொல்பவர்கள் கார்கில் போரை கொண்டுவந்து பல இந்தியவீரர்களின் உயிருக்கும், உடமைக்கும், நாட்டின் பலகோடி ரூபாய் இழப்புக்கும் காரணம் இந்த கோயில் குடிகொண்ட சாமி தான் என்று சொல்வார்களா? மக்களை காக்கும் சாமி என்று ஒருபக்கம் சொல்லிக்கொண்டு, அந்நியநாட்டு தீவிரவாதிகள் வருவதற்கு காரணமான துப்பாக்கிக் குண்டை தனது பெட்டியில் சாமி வைக்க சொன்னது சரி தான் என்று இந்த பக்தர்கள் நம்புகிறார்களா?

அடுத்து, எலுமிச்சை வைக்கப்பட்டபோது, எலுமிச்சை விலை கடுமையாக உயர்ந்ததாம். தேங்காய் வைக்கப்பட்டபோது, அதன் விலை உயர்ந்ததாம். எலுமிச்சையும் தேங்காயும் விளைச்சலைப் பொருத்து அதன் விலையும் கூடவும் குறையவும் செய்யும். சரி. தேங்காய் விலை உயர்ந்தது என்று சொல்கிறீர்களே! இப்போது சில நாட்களுக்கு முன்னால் கூட தேங்காய் விவாசாயிகள் தேங்காய் விலையை உயர்த்தக்கோரி ரோட்டில் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடத்தினார்களே! அப்படியானால் மூன்று வருடங்களுக்கு முன்பே தேங்காய் விலையை சாமி உயர்த்தியதாக நம்பும் இவர்கள், தேங்காய் வியாபாரிகளின் போராட்டம் பற்றி என்ன சொல்லப்  போகிறார்கள்?  

மேலும், நாட்டு சர்க்கரை வைத்தபோது, கரும்பு கொள்முதல் விலை, 1,800 ரூபாயாக உயர்ந்தது' என்று சொல்கிறார்கள். கரும்பு கொள்முதல் விலையை ஒவ்வொரு ஆண்டும் அரசு ஏற்றிக்கொண்டுதான் இருக்கிறது. இதற்கும் நாட்டு சக்கரை வைப்பதற்கும் என்ன சம்மந்தம்? இவர்களின் கூற்றுப்படி நாட்டு சக்கரை வைத்தால் நாட்டு சக்கரை விலையல்லவா ஏறியிருக்க வேண்டும்? கரும்பு விலை ஏன் ஏறியது? கரும்பிலிருந்து நாட்டு சக்கரை மட்டும் தான் தயாரிக்கப்படுகிறதா? சீனி-மண்டை வெல்லம் போன்றவைகள் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது? யாரும் சீனியை, ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்காமலேயே சீனி விலை விண்ணை நோக்கி செல்கிறதே! இதற்கு இந்த் நம்பிக்கையளர்களிடம் பதில் உண்டா? 

மேலும், இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு பக்தர் கனவில் வந்த கடவுள், ஒரு சொம்பு ஆற்றுநீரை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கச் சொன்னாராம். அதனால் தான் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையும், பழவேற்காடு ஏரி, ஈரோடு அருகே காவிரியாற்றில் மூழ்கி பலர் பலியான சம்பவமும் நடந்ததாம். கதை விடுவதற்கும் ஒரு அளவில்லையா? முல்லைப் பெரியாறு பிரச்சினை இந்த ஆண்டு தான் தொடங்கியதா? அது பல்லாண்டு காலமாக இரு மாநிலங்களுக்கு மத்தியில் இருந்துவரும் அரசியல் பிரச்சினை. பூதாகரமான இந்த பெரியாறு  பிரச்சினையை சிறு சொம்பில் அடைக்கும் இந்த பக்தகோடிகள் பலே கைதேர்ந்தவர்கள் தான்.

இவ்வாறான இவர்களின் [மூட]நம்பிக்கை பட்டியல் நீள்கிறது. விரிவஞ்சி தவிர்க்கிறோம். எனவே நாம் இவர்களுக்கு சொல்லிக்கொள்வது கடவுள் நம்பிக்கை தவறல்ல; ஆனால் மூடநம்பிக்கையை விதைப்பது  தான் தவறு என்பதை இந்த மக்கள் உணர்ந்து கொள்ளட்டும்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக