வியாழன், 5 ஜூலை, 2012

கருணைமனு மீதான ஜனாதிபதியின் முடிவு, சுவீகரிக்கப்பட்ட ஒன்றே; அப்துல்கலாம்.


ந்திய நாட்டின் அரசியல் சட்டத்தின் 72வது பிரிவு மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளின் கருணை மனுமீதான பரிசீலனை செய்யவும், அவர்களுக்கு தண்டனையை குறைக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கியுள்ளது.இந்த அதிகாரத்தின் அடிப்படையில் ஜனாதிபதியாக இருப்பவர்கள் பல்வேறு குற்றவாளிகளை மன்னித்து அவர்களின் மரணதண்டனையை ஆயுள்தண்டனையாக மாற்றி அவர்களின் விடுதலைக்கு காரணியாக இருக்கிறார்கள். சிட்டிங் ஜனாதிபதியான திருமதி பிரதீபா பாட்டீல், இதற்கு முன் இருந்த ஜனாதிபதிகளி எல்லாம் விஞ்சும் வகையில் கருணை மனுக்கள் மீது அதீத கருணை காட்டி சுமார் 35 மரணதண்டனை கைதிகளை ஆயுள்தண்டனையாக குறைத்துள்ளார். இவ்வாறு ஜனாதிபதியின் கருணைப் பார்வை பெற்ற குற்றவாளிகள் பலர் கொடூர குற்றங்கள் புரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த கருணைமனு மீதான முடிவெடுப்பது விசயத்தில் முன்னாள் ஜனாதிபதியான அப்துல்கலாம் சில கருத்துக்களை கூறியுள்ளார். அவர் எழுதியுள்ள ''திருப்புமுனைகள்' ('டேர்னிங் பாய்ண்ட்ஸ்') என்ற  புத்தகத்தில் இந்தப் பிரச்சினை பற்றி குறிப்பிட்டிருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பதாவது:
குற்றத்தின் தன்மை, குற்றத்தின் கடுமை, மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளின் சமூக, பொருளாதார நிலைமை போன்றவற்றை ஒரு சாதாரண குடிமகனின் நிலையில் இருந்து (ஜனாதிபதி) பரிசீலிக்க வேண்டும் என நான் நினைத்தேன்.

நிலுவையில் உள்ள எல்லா வழக்குகளும் சமூக, பொருளாதார பாரபட்சத்தை கொண்டிருப்பதாக ஒரு ஆய்வில் தெரிய வந்தது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. இது, குறைந்த அளவே விரோதம் கொண்டிருந்து, குற்றத்தை செய்வதில் நேரடி நோக்கம் கொண்டிராதவர்களையும் நாம் தண்டித்துக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வை எனக்கு ஏற்படுத்தியது. விசாரணை நீதிமன்றத்தில் வழங்கப்படுகிற மரண தண்டனை அனைத்து மேல்முறையீடுகளிலும் உறுதி செய்யப்பட்ட நிலையில், அதை ஜனாதிபதி உறுதி செய்வது என்பது மிகவும் கடினமான பணி ஆகும்.

ஜனாதிபதி மாளிகையில் பல ஆண்டுகளாக இப்படி ஏராளமான வழக்குகள் (கருணை மனுக்கள்) நிலுவையில் இருக்கின்றன. இது, எந்தவொரு ஜனாதிபதியும் மகிழ்ச்சியுடன் முடிவு எடுக்கக்கூடிய பணி அல்ல. இது மரபு வழியாக சுவீகரிக்கப்பட்ட ஒன்று. 

மரண தண்டனையை எதிர்த்து போடப்படுகிற மேல் முறையீட்டு வழக்குகளை நீதிமன்றங்கள் விசாரிக்கிறபோது, தண்டிக்கப்படுகிற கைதியின் வாழ்வாதார நிலை, அவரது குடும்பத்தின் நிலை ஆகியவற்றை சட்ட அமலாக்க அதிகாரிகள் (போலீஸ்) புத்திசாலித்தனமாக கண்டறிய உஷார்ப்படுத்த வேண்டும். 
இத்தகைய ஆய்வு, குற்றவாளி எந்த நோக்கத்தில் குற்றத்தை செய்தார் என்பதை தெளிவாக தெரிய வைத்து விடும். 

நாம் எல்லோரும் கடவுளின் பிள்ளைகள். இந்த நிலையில், செயற்கையாக அல்லது உருவாக்கப்பட்ட ஒரு சாட்சியத்தின் அடிப்படையில் ஒரு உயிரை எடுப்பதற்கு எந்தவொரு மனித அமைப்போ அல்லது மனிதரோ தகுதியானவர்கள் என்று என்னால் உறுதியாக கருத இயல வில்லை.
இவ்வாறு அதில் அப்துல் கலாம் கூறி உள்ளார். 

சகோதரர் அப்துல்கலாம் அவர்களின் கருத்தின் சாராம்சம் என்பது மரணதண்டனை விதிக்கப்பட்டு கருணைமனு அனுப்பியவர்களில் பெரும்பாலோரின் மனு, அவர்களின் சமூக பொருளாதார பாரபட்சத்தை காட்டுவதாக உள்ளதாகவும், அவர்களில் சிலரே திட்டமிட்டு குற்றங்கள் செய்தவர்கள் என்றும் கூறுகின்றார். அவரின் கூற்றில் அனைத்தும் சரி என்று சொல்லமுடியாவிட்டாலும் சில உண்மைகளும் இல்லாமலில்லை. எப்படி எனில், இந்தியநாட்டில் மரணதண்டனை விதிப்பது அரிதிலும் அரிதான வழக்குகளில் தான். அதிலும் மரணதண்டனை பெற்றவர்களில் பெரும்பாலோர் அப்துல்கலாம் கூறியதுபோன்று சமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களாக இருப்பதைக் காணலாம். அப்சல்குரு என்பவர்தான் நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதலுக்கு காரணம் என்பதற்கு ஆதாரம் இருக்குமானால் அவரை உடனடியாக தூக்கில் போடுவதில் எவருக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் தூக்குத்தண்டனை விதித்த நீதிமன்றம் எந்த ஆதாரத்தையும் கூறாமல் தூக்குத்தண்டனை வழங்கியுள்ளதை கூறமுடியும். அதற்கு காரணம் அப்சல்குரு சமூகரீதியாக அவர் ஒரு மதத்தை சார்ந்தவர் என்பதால் கூட இருக்கலாம். அதே போன்று பொருளாதார பின்னணிஇல்லாதவர்கள் நிலையும் இதுதான். ஆனால் சமூக ரீதியான செல்வாக்குப் பெற்ற, அல்லது அரசியல் ரீதியான செல்வாக்குப் பெற்ற, அல்லது பொருளாதார ரீதியாக செல்வாக்கு பெற்ற குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை என்பது அரிதான ஒன்று. அவ்வாறே வழங்கப்பட்டாலும் அவை கிணற்றில் போட்ட கல்லாக இருப்பதை நாம் கண்கூடாகவே பல கைதிகள் விசயத்தில் பார்க்கிறோம். இதைத்தான் அப்துல்கலாம் தனது எழுத்தில் பிரதிபளித்துளார் எனத் தெரிகிறது.

அதே நேரத்தில், ''மரண தண்டனையை எதிர்த்து போடப்படுகிற மேல் முறையீட்டு வழக்குகளை நீதிமன்றங்கள் விசாரிக்கிறபோது, தண்டிக்கப்படுகிற கைதியின் வாழ்வாதார நிலை, அவரது குடும்பத்தின் நிலை ஆகியவற்றை சட்ட அமலாக்க அதிகாரிகள் (போலீஸ்) புத்திசாலித்தனமாக கண்டறிய உஷார்ப்படுத்த வேண்டும். 
இத்தகைய ஆய்வு, குற்றவாளி எந்த நோக்கத்தில் குற்றத்தை செய்தார் என்பதை தெளிவாக தெரிய வைத்து விடும்' என்ற அப்துல்கலாமின் கூற்று ஏற்புடையதல்ல. குற்றவாளியின் வாழ்வாதார நிலையோ, அவரது குடும்ப நிலையையோ கவனித்து அவர் வேண்டுமென்றே குற்றத்தை செய்தாலோ, அல்லது எதேச்சையாக செய்திருந்தாலோ மன்னிப்பளிக்க வேண்டும் என்று அப்துல்கலாம் கருதுகிறாரா? அல்லது அந்த குற்றவாளி எத்தகைய கொடூர செயலை செய்திருந்தாலும் தூக்கில் போடக்கூடாது எனக் கருதுகிறாரா என்பது தெளிவாக்கப் படவில்லை. குற்றவாளியின் வாழ்வாதார நிலை பற்றி பேசும் அப்துல்கலாம், குற்றவாளியால் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் நிலை பற்றி மறந்தும் பேசாதது ஆச்சர்யமே. ஆனால் இஸ்லாம் குற்றவாளியின் நிலையிலிருந்து ஒரு செயலை பார்க்கச் சொல்லவில்லை. பாதிக்கப்பட்டவனின் நிலையிலிருந்துதான் பார்க்கச் சொல்கிறது என்பது முஸ்லிமான அப்துல்கலாம் அவர்கள் அறியாத ஒன்றல்ல. ஆயினும் இதை அவர் கவனத்தில் கொள்ளாதது சரியல்ல. 

மேலும், ''நாம் எல்லோரும் கடவுளின் பிள்ளைகள். இந்த நிலையில், செயற்கையாக அல்லது உருவாக்கப்பட்ட ஒரு சாட்சியத்தின் அடிப்படையில் ஒரு உயிரை எடுப்பதற்கு எந்தவொரு மனித அமைப்போ அல்லது மனிதரோ தகுதியானவர்கள் என்று என்னால் உறுதியாக கருத இயல வில்லை' என்று கூறி நேரடியாக இஸ்லாத்தோடு முரண்படுகிறார். முதலாவது நாம் யாரும் கடவுளின் பிள்ளைகள் அல்ல. கடவுளின் அடிமைகள் தான் என்பதை அப்துல்கலாம் புரிந்துகொள்ள வேண்டும். அடுத்து ஒரு சாட்சியத்தின் அடிப்படையில் ஒரு உயிரை எடுப்பதற்கு நமக்கு தகுதியில்லை என்று அவர் கூறுவதன் மூலம் தூக்குத்தண்டனை கூடாது என்று சொல்லவருகிறார். ஒரு சாட்சியத்தின் அடிப்படையில் ஒரு குற்றவாளியின் உயிரை எடுக்க மனிதர்கள் தகுதியற்றவர்கள் என்றால், ஒரு அப்பாவியின் உயிரை அநியாயமாக பறிக்கும் குற்றவாளிக்கு மட்டும் அந்த தகுதி உண்டென்று கலாம் சொல்லுவாரா?

ஆனால் அப்துல்கலாம் ஒன்றை தெளிவாக்கியிருக்கிறார். அது என்னவென்றால், குற்றவாளிகளை மன்னிக்கும் ஜனாதிபதியின் செயல்பாடு என்பது இது மரபு வழியாக சுவீகரிக்கப்பட்ட ஒன்று என்று கூறியுள்ளார். ஆனால் எங்கிருந்து சுவீகரிக்கப்பட்டது என்றுதான் சொல்லவில்லை. எது எப்படியோ எங்கிருந்தோ சுவீகரிக்கப்பட்டு ஜனாதிபதிக்கு வழங்கப்படுள்ள இந்த அதிகாரம் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு, பாதிக்கப்பட்டவுனுக்கே அதிகாரம் என்ற சட்டம் கொண்டுவர வேண்டும். அப்போதான் நீதி நிலைக்கும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக