செவ்வாய், 3 ஜூலை, 2012

மதுரைக்கு ஒரு சகாயம்; விருதுநகருக்கு ஒரு பாலாஜி. மாற்றப்பட்டார் பாலாஜி.

விருதுநகரில் ஒரு சகாயம்... அதிரடி கலெக்டர் பாலாஜிக்கு மக்கள் பாராட்டு மழை!
புதன்கிழமை, ஜூன் 6, 2012, 16:20 [IST]

விருதுநகர்: பொது மக்கள் பிரச்சனைக்கு முக்கியத்துவம் கொடுத்து தீர்த்து வைப்பதில் தமிழகத்தில் முன்னிலை வகிக்கின்றார் விருதுநகர் மாவட்ட கலெக்டர் பாலாஜி. இதனால் அவருக்கு பொது மக்கள் பாராட்டு மழை பொழிகின்றனர்.

விருதுநகர் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்ற பாலாஜி, மாவட்டத்தில் மாநில அரசின் திட்டங்களில் ஏதேனும் குறைகள் இருப்பின் அது குறித்தும், தங்கள் பகுதிகளில் நடக்கும் உடனடி நிகழ்வுகள் குறித்தும், தனது செல்போன் எண்ணான 94880 64000க்கு தொடர்பு கொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என கூறியிருந்தார்.

இதனையடுத்து மாவட்டத்தில் இருந்து பல தரப்பட்ட மனுக்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து தகவல்கள் மலை மலையாக குவிந்து வருகின்றதாம். மேலும் பலர் செல்போனில் தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் கோரிக்கைகளை தெரிவித்து வருகின்றனர். இவைகளை எல்லாம் பொறுமையாக கேட்கும் பாலாஜி அது குறித்த உண்மையான தகவல்களை தனது நம்பிக்கைக்குரிய அதிகாரிகள் மற்றும் சமூக சேவகர்கள் மூலம் சரிபார்க்கிறார்.

இந்த நிலையில் மாவட்டத்தில் வருவாயத்துறைக்கு என சுமார் 100 பணியாளர்கள் தினக்கூலி அடிப்படையில் தேவைப்பட்டது. இதில் அரசியல் மற்றும் சிபாரிசுகள் மூலம் தவறான நபர்கள் உள்ளே நுழைந்துவிடக் கூடாது என அவரே நேரடி நேர்முக தேர்வு நடத்தி ஆட்களை தேர்வு செய்துள்ளார்.

அதே போல மாவட்டத்தில் 1,076 அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியாளர்கள் தேவைப்படுகின்றார்களாம். இதில் எப்படியும் வேலை வாங்கிவிட வேண்டும் என பலரும் அரசியல்வாதிகள் சிபாரிசை நாடி வருகின்றார்களாம். ஆனால் முன்பு போலவே தகுதியான நபர்களுக்கு மட்டுமே பணி வழங்க வேண்டும், அரசியல் சிபாரிசுகளுக்கு வேலை இல்லை என்று தைரியமாக கூறி, அதை செயல்படுத்தவும் தயாராகி வருகின்றாராம் பாலாஜி.

இதனால் மாவட்டத்தில் உள்ள சில அரசியல் புரோக்கர்கள் வைகைப்புயல் வடிவேல் கூறும் டயலாக்கான வடை போச்சே ஸ்டைலில் பணம் போச்சே என புலம்பி வருகின்றார்களாம்.
கலெக்டர் பாலாஜியின் நேர்மையான நடவடிக்கைகளால் ஏற்கனவே மகிழ்ந்து போன மக்களை இந்த அறிவிப்பு மேலும் மகிழ வைத்துள்ளது.

நேர்மையாக செயல்பட்டா இப்படித்தான்.... காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்ட விருதுநகர் ஆட்சியர் பாலாஜி
திங்கள்கிழமை, ஜூலை 2, 2012, 12:43 [IST]

விருதுநகர்: மதுரை மாவட்டத்தில் நேர்மையான ஆட்சியராகப் பணியாற்றிய சகாயம் தூக்கி அடிக்கப்பட்டதைப் போல விருதுநகர் ஆட்சியர் பாலாஜியும் இடமாற்றம் செய்யப்பட்டதுடன் காத்திருப்போர் பட்டியலிலும் வைக்கப்பட்டுவிட்டார்.
காத்திருப்போர் பட்டியலில் வைக்கும் அளவுக்கு விருதுநகர் ஆட்சியர் பாலாஜி செய்த "குற்றங்கள்" என்ன தெரியுமா?
- விருதுநகரில் ஆக்கிரமிப்புகளை எதிர்ப்புகளை மீறி அகற்றினார்
- புதிய பேருந்து நிலையத்தை முழுமையாக செயல்படுத்தினார்
- அரசின் நலத்திட்டங்கள் பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்தார்
- மோசடி செய்யும் ஊராட்சித் தலைவர்களுக்கு ஆப்படித்தார்
- ஒழுங்காக வேலை செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்
- சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் தேர்வில் அரசியல்வாதிகளின் பரிந்துரைகளை ஏற்க மறுத்தார்.
இப்படி "பல செயல்கள்" செய்ததால்தான் அவரை இடமாற்றம் செய்து காத்திருப்போர் பட்டியலில் வைத்திருக்கின்றனர். அரசின் இந்த நடவ்டிக்கைக்கு அரசு ஊழியர்கள் சங்கம் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக