வியாழன், 5 ஜூலை, 2012

தொடரும் தீண்டாமை; பள்ளி சத்துணவு பணியில் மாற்று சமூகப் பெண்: சத்துணவை மாட்டுக்கு கொட்டி வீணடிப்பு.


ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே, பள்ளி சத்துணவு பணியில் மாற்று சமூக பெண் ஈடுப்பட்டதால், அதன் உணவை சாப்பிட அங்குள்ள மாணவிகள் முன் வரவில்லை. இதனால் அதை மாட்டுக்கு கொட்டி வீணடித்து வருகின்றனர். .


விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கே.கலங்காபேரி அருகே உள்ளது கம்மாபட்டி. இங்கு குறிப்பிட்ட சமூகத்தினர் அதிகம் வசிக்கின்றனர்.விவசாயமே முக்கிய தொழிலாக உள்ள இங்குள்ளோர் , மற்ற சமூகத்தினர் சமைத்த உணவை,தங்களது பெண் குழந்தைகள் சாப்பிட அனுமதிப்பதில்லை. இதைதொடர்ந்து, இங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி சமையல் பணியில், மாற்று சமூகத்தினர் ஈடுப்பட்டதால், மாணவிகள் சத்துணவை சாப்பிடாமல் இருந்தனர். இதனிடையே ,அதே சமூகத்தை சேர்ந்த பெண் சமைத்ததால் சாப்பிட துவங்கினர். இந்நிலையில் , இப்பள்ளி சத்துணவு சமையல் பணியில் தாழ்த்தப்பட்டவர் ஈடுப்படுத்தப் பட்டுள்ளார். இவர், நேற்று முன்தினம் பணியில் சேர்ந்து உணவை சமைத்தார்.இதை மாணவிகள் சாப்பிட முன்வரவில்லை. இது போல் நேற்றும் மாணவிகள் சாப்பிடாததால், அதன் உணவு மாடுகளுக்கும், தரையிலும் கொட்டப்பட்டு வீணடிக்கப்பட்டது.


ஊர் தலைவர் சஞ்சீவி நாயக்கர் ,"" எங்களுக்கென தனிகலாசாரம், பழக்கவழக்கம் உள்ளது. மற்றவர் சமைத்த உணவை எங்கள் பெண்பிள்ளைகள் சாப்பிடும் பழக்கவழக்கம் இல்லை. பள்ளி துவங்கியது முதலே கலாசாரம், பழக்கவழக்கத்தை கூறி, எங்கள் சமூகத்தவரை சமையலராக பணியமர்த்த கோரி வருகிறோம். இதுவரை நடக்கவில்லை. கோரிக்கை நிறைவேறாவிட்டால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஊர்கூட்டத்தில் முடிவு செய்வோம்,'' என்றார். ஸ்ரீவி.,ஒன்றிய கமிஷனர் ரவி, ""பிரச்னை குறித்து டி.ஆர்.ஓ., கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளேன். அவரது ஆலோசனை படி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். ஸ்ரீவில்லிபுத்தூர் வந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொது செயலாளர் சாமுவேல் ராஜ் , ""தாழ்த்தப்பட்டவர் என்பதால் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அவரை பணி மாற்ற முயற்சி நடக்கிறது. அவ்வாறு செய்தால், தீண்டாமைக்கு அரசு அதிகாரிகளே துணை போவதாகும். பணி மாற்றம் செய்ய கூடாது,'' என்றார்.


நன்றி;

தினமலர்;http://www.dinamalar.com/News_Detail.asp?Id=500836

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக