வெள்ளி, 27 ஜூலை, 2012

வீரமணி அய்யா...வேகம் சரியா?


தி.க. தலைவர் கி.வீரமணி அவர்கள் பல்வேறு விசயங்களில் தனது சீரிய சிந்தனையை வெளிப்படுத்துபவர். ஆனால் அவரது சமீபகால எழுத்துக்கள் அவரது தடுமாற்றத்தைக் காட்டுவதாக உள்ளது. ஊடகங்கள்- இணையதளங்கள் போன்ற பொதுவான தளங்களில் பண்பாடான வார்த்தைகளை பயன்படுத்தி கருத்துகளை பதிவு செய்பவர்கள் பெரும்பான்மையாக இருந்தாலும், ஒரு சாரார் கீழ்த்தரமான வார்த்தைகளை கொண்டு இணையங்களை நிரப்பவும் செய்கின்றனர். இத்தகையோரை எவ்வாறு அணுகுவது என்ற ஒரு கேள்வியும் அதற்கு விடுதலை இதழில் வீரமணி அளித்துள்ள பதிலையும் பாருங்கள்.

கேள்வி: இணைய தளங்களில் கருத்துக்களைப் பதிவு செய்பவர்களில் பலர் பண்பாடற்ற சொற்களைப் பயன் படுத்துவது குறித்து . . . 

- தா. தமிழரசி, சென்னை-40

பதில்: அதே மொழியில் அல்லது அதிலும் இழிவான வகையில் அவர்களுக்குத் திருப்பிக் கொடுப்பதே அவர்களைத் திருத்தும் ஒரே வழி! நாய்களுக்கு மல்லிகையையா சூட்டிடமுடியும்?

வீரமணியின் பதிலை படித்தீர்களா? ஒரு பண்பாடற்ற ஒருவன், பண்பாடற்ற வார்த்தைகளை கொண்டு கருத்துக்களை பதிவு செய்தால் அதை படிக்கும் நாமும் அதே போன்ற பண்பாடற்ற வார்த்தைகளையோ அல்லது அதைவிட இழிவான கீழ்த்தரமான வார்த்தைகளையோ பயன்படுத்தி அவர்களைத் திருத்த வேண்டுமாம். அதாவது நாய்களுக்கு மல்லிகையா சூடமுடியும் என்ற வீரமணியின் வார்த்தையில் சொல்வதானால் ஒரு நாய் நம்மை கடித்துவிட்டால் அந்த நாயை நாமும் விழுந்து கடிக்கவேண்டும் என்பதுதான். இது சரியானதா? ஒரு அறிவிலி கீழ்த்தரமாக எழுதுகிறான் என்றால், அவனை திருத்த என்ன செய்யவேண்டும்? அழகான வார்த்தைகளில் அவனுக்கு உபதேசம் செய்து அவனது தவறை உணர்த்தவேண்டும். அப்படியும் அவன் திருந்தவில்லையானால் அவனிடமிருந்தும் நாம் விலகிக்கொள்ளவேண்டும். அதைத்தானே திருவள்ளுவர், ''இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நான நன்னயம் செய்து விடல்' என்று கூறுகிறார். இது வீரமணிக்கு தெரியாதா? தீய செயலை செய்யும் ஒருவனை திருத்த நல்லவர்களும் அதே தீய செயலை கையிலெடுக்க வேண்டும் என்று அறிவுரை கூறுவதுதான் பகுத்தறிவா என்று வீரமணியாரை கேட்கவேண்டியிருக்கிறது.

இதே வீரமணியின் இன்னொரு பதிலை பாருங்கள்;

கேள்வி : பிரான்ஸ் நாட்டில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் மாவீரன் பிரபாகரன் அவர்களின் உருவம் பொறித்த அஞ்சல் தலையை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது பற்றி....
க. பழநிசாமி, தெ. புதுப்பட்டி திண்டுக்கல்

பதில்: மகிழ்ந்து பாராட்டி அந்த அரசுக்கு நமது நன்றியைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்!  இதன் மூலம் பிரபாகரன் ஒரு விடுதலை வீரனே தவிர, பயங்கரவாதி அல்ல என்பது வரலாற்றில் பதிவாகிவிட்டது!

தமிழீழம் என்ற பெயரில் தமிழ் பேசும் முஸ்லிம்களை கொன்றுகுவித்த பயங்கரவாதியான, அப்பாவித் தமிழர்களை பகடைக்காயாக்கி பதுங்கிய மாவீரன்[!] பிரபாகரனுக்கு பிரான்ஸ் நாடு தபால்தலை வெளியிட்டு விட்டதாம். அதனால் பிரபாகரன் பயங்கரவாதி இல்லையாம் சொல்கிறார் வீரமணியார். ஒரு நாட்டில் ஒருவருக்கு தபால்தலை வெளியிடப்பட்டு விட்டால் அந்த நாடு அவரை அங்கீகரித்து விட்டது என்றோ,அவர் தூயவர் என்றோ அர்த்தம் என்றால், பிரபாகரனுக்கு தபால்தலை வெளியிட்ட அதே பிரான்ஸ் நாட்டில் வீரமணி போற்றும் மாவீரர்[!] பிரபாகரன் தோற்றுவித்த விடுதலைப்புலி இயக்கத்திற்கு தடையில்லை என்று வீரமணி கூறுவரா? பிரபாகரனை போராளியாக மதித்து பிரான்ஸ் தபால்தலை வெளியிட்டிருக்குமானால் அவரது போராளி இயக்கத்திற்கு மட்டும் தடை ஏன்? மேலும், அதே பிரான்ஸ் பாரிஸ் நகர மேன்முறையீட்டு நீதிமன்றம், புலிகளின் முன்னரங்க அமைப்பாக செயற்பட்ட பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவுக்கு தடை விதித்ததுடன் விடுதலைப் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதிசேர்த்த குற்றத்திற்காக பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் ஆறு பேர் குற்றவாளிகளாக காணப்பட்டு சிறைத்தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்த செய்தியெல்லாம் வீரமணியார் பார்வைக்கு கிட்டவில்லையா? 

மேலும் ஒரு நாடு ஒருவருக்கு தபால்தலை வழங்கிவிட்டால் மட்டுமே அவர் மாவீரர் என்றால் இந்திய அரசு வீரமணியால் அதிகம் விமர்சிக்கப்படும் ராஜாஜிக்கு தபால்தலை வெளியிட்டுள்ளதே. வீரமணியின் அளவுகோல்படி அவர் தியாகியல்லவா? அவரை வீரமணி விமர்சிப்பது சரியா? அதோடு ஸ்ரீ ரமண மகரிசி, சுவாமி சிவானந்தா, திருமுருக கிருபானந்த வாரியார், ராமாயணம் இயற்றிய கம்பர்,தியாகராஜர் போன்றோரின் தபால்தலையைக் கூட இந்திய அரசு வெளியிட்டுள்ளதே. இவர்கள் கொள்கையெல்லாம் சரிதான் என்று வீரமணி அங்கீகரிக்கிறாரா? இவர்களையும் மாவீரர்கள் என்று வீரமணி போற்றுவாரா? நாளையே பாகிஸ்தான் சீனா ராஜபக்சேவுக்கு தபால்தலை வெளியிட்டுவிட்டால் அவரையும் மாவீரர் என்று வீரமணியார் அங்கீகரிப்பாரா? ஒரு நாட்டில் தபால்தலை வெளியிட்டு சிறப்பிக்கப்பட்டவர்கள் அனைவரும் தியாகிகள் அல்ல; அவர்களில் சிலரைத்தவிர, என்பதை வீரமணிக்கு தெளிவாக புரியும் வகையில் சொல்லவேண்டுமானால் நமது நாட்டில் சில சினிமா நடிகர்களுக்கு கூட தபால்தலை வெளியிடப்பட்டது. அதற்காக அவர்களெல்லாம் சுதந்திரப் போரட்ட தியாகிகளா? அல்லது சமுதாய முன்னோடிகளா? சிந்தியுங்கள் வீரமணியாரே! தமிழர் பாதுகாப்பு என்ற பெயரில் அரசியல் செய்யாதீர்கள் என்பதுதான் எமது வேண்டுகோளாகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக