வியாழன், 5 ஜூலை, 2012

குழந்தையை தண்ணீர் வாளியில் முக்கி கொல்லச் சொல்லி, 'ஸ்கைப்'பில் பார்த்த வாலிபர்!

லண்டன்: ஸ்கைப்பில் பேசிக் கொண்டிருக்கையில் அழுது கொண்டே இருந்த கள்ளக்காதலியின் ஒன்றரை வயது பெண் குழந்தையை தண்ணீர் நிறைந்த பக்கெட்டில் முக்கி கொல்லச் சொல்லி அதை இன்டர்நெட்டில் பார்த்த இங்கிலாந்தை சேர்ந்தவர் நார்வேக்கு நாடு கடத்தப்படவிருக்கிறார்.

இங்கிலாந்தில் உள்ள வடக்கு லண்டன் பகுதியான பின்னரைச் சேர்ந்தவர் அம்மாஸ் குரேஷி(33). அக்கௌண்டன்ட். திருமணமான அவருக்கும் யாஸ்மின் சவுத்ரி என்ற பெண்ணுக்கும் ரகசியத் தொடர்பு இருந்தது. தற்போது யாஸ்மின் நார்வேயில் வசித்து வருகிறார். ஒரு நாள் குரேஷியும், யாஸ்மினும் ஸ்கைப் மூலம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது யாஸ்மினின் ஒன்றரை வயது பெண் குழந்தை ஹுனைனா அழுது கொண்டே இருந்தது.

இது குரேஷிக்கு எரிச்சலாக இருந்தால் குழந்தையை ஒரு பக்கெட் தண்ணீரி்ல் முக்குமாறு அவர் யாஸ்மினிடம் தெரிவித்துள்ளார். யாஸ்மினும் குழந்தை என்று கூட பாராமல் ஹுனைனாவை பக்கெட் தண்ணீரில் முக்கினார். இதை குரேஷி இன்டர்நெட் மூலம் பார்த்து ரசித்துள்ளார். குழந்தை மூச்சுவிடாமல் இருக்கவே யாஸ்மின் மருத்துவர்களை அழைத்துள்ளார்.

அவர்கள் வரும்போது குழந்தை சுயநினைவை இழந்துவிட்டது. பின்னர் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை மறுநாளே இறந்தது. இந்த சம்பவம் கடந்த 2010ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்தது. குழந்தை எதிர்பாராவிதமாக பக்கெட்டில் விழுந்ததாக யாஸ்மின் போலீசாரிடம் தெரிவித்தார்.

குழந்தையை ஒழுங்காக கவனிக்காததற்காக யாஸ்மினை நார்வே போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து லண்டனில் குரேஷி கைது செய்யப்பட்டார். இதையடுத்து டிசம்பர் மாதம் நார்வே போலீசார் லண்டன் சென்று குரேஷியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் குழந்தையை யாஸ்மின் கொன்றதை இன்டர்நெட்டில் பார்த்ததை ஒப்புக் கொண்டார். ஆனால் குழந்தையை தான் கொல்லச் சொல்லவில்லை என்று தெரிவித்ததாகத் தெரிகிறது.

இதையடுத்து யாஸ்மின் மற்றும் குரேஷி மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தையை தான் தான் கொன்றதாக யாஸ்மின் கடந்த 2011ம் ஆண்டு அக்டோபரில் தான் ஒப்புக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே வரும் 20ம் தேதி குரேஷியை நார்வேக்கு நாடு கடத்துவது தொடர்பான மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது என்று போலீசார் தெரிவித்தனர்.
குழந்தை ஹுனைனாவின் தந்தை யாஸ்மினை பிரிந்து தற்போது பாகிஸ்தானில் வசித்து வருகிறார். அவர் தனது குழந்தை கொல்லப்பட்ட சம்பவம் குறித்து அறிந்து பேரதிர்ச்சி அடைந்தார்.

நன்றி; அஹ்மது இமாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக